சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார்.
நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. நதிநீர் இணைப்பு திட்டம், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை பெறுவது, இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களை கையாள்வது, பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். நீட் தேர்வு மசோதா, பேரிடர் நிவாரணத் தொகை குறித்து அவருடன் விவாதிக்க உள்ளார்.
இதுதவிர, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து பேசுகிறார்.
நாளை (ஏப்.1-ம் தேதி) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருடன் ஸ்டாலின் பேச உள்ளார். அப்போது, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பெரிய அளவிலான கூட்டணி அமைப்பது குறித்தும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.
ஏப்.2-ம் தேதி அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்று, அதை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் சோனியா, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சனிக்கிழமை இரவு முதல்வர் சென்னை திரும்புகிறார்.
திராவிட மாடல் அடையாளம்
தனது டெல்லி பயணம் குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது: அமீரகப் பயணத்தை தொடர்ந்து அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைகிறது. டெல்லியில் மார்ச் 31-ல் (இன்று) பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளேன். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளேன். தமிழகத்தில் திமுக அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு தரவேண்டிய வரி வருவாய், மழை, வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது.
தொடர்ந்து, இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு நடக்க உள்ளது. இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக டெல்லியில், திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயம் ஏப்.2-ம் தேதி திறக் கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்ட பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதசார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர். இந்திய அரசியலில் திமுகவும், அதன் கொள்கைகளை செயல் வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அறிவாலயம்.
இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.