சென்னை: கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கிய வழக்கில் அதிமுகவை சேர்ந்த 20 நபர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் கள்ளஓட்டு போட சென்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி கைதான ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதே வழக்கில் அதிமுக பிரமுகரான ஏ.டி.அரசு என்ற திருநாவுக்கரசு மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்ட 20 நபர்கள் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 20 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதில், ஏ.டி அரசு என்ற திருநாவுக்கரசு என்பவர் மட்டும் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமெனவும், மற்றவர்கள் பெரியகுளம் காவல்நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.