திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்பட திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பத்மாவதி தாயார் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 8 மணியில் இருந்து 8.30 மணிவரை பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது.
அதேபோல் திருச்சானூரில் உள்ள சூரியநாராயணசாமி கோவிலில் நாளை காலை 7 மணியில் இருந்து காலை 7.45 மணி வரை சூரியநாராயணசாமி உற்சவருக்கு அபிஷேகம், மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. நாளை அதிகாலை சுப்ர பாத சேவை, தோமாலா சேவை, கொலு, அர்ச்சனை மற்றும் மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பஞ்சாங்க சிரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் மற்றும் பஞ்சாங்க சிரவணம் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் வஸ்திரம் சமர்ப்பிக்கின்றனர்.