தென்கொரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்ததாகவும், ஒரு விமானி படுகாயம் அடைந்திருப்பதாகவும் மீட்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சியோலுக்கு தென்கிழக்கே உள்ள சச்சியோன் நகரில் உள்ளூர் நேரப்படி மதியம் ஒன்றரை மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 3 ஹெலிக்காப்டர்கள், 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். KT1 ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் விபத்தில் 4 பேர் மட்டுமே சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.