டெல்லி: பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தை போக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கலந்துரையாடினார். பரீட்சைகளை கண்டு பல இடங்களில் மாணவர்கள் கவலை கொள்கிறார்கள். சில நேரங்களில் தேர்வு முடிவு எவ்வகையில் இருக்கும் என்ற கவலையில் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். இவை அனைத்தும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையிலும், பரீட்சைகளுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆண்டுதோறும் பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு பிரதமர் மோடி தன்னம்பிக்கையூட்டி வருகிறார். அந்த வகையில், இம்முறையும், மாணவர்கள் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் சந்திக்க உற்சாகப்படுத்தி பேசினார். தேர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அனுப்பியிருந்தீர்கள், அதற்கு நான் பதில் அளித்துள்ளேன். தேர்வுகள் பெற்றோருக்குத்தான் பதற்றத்தை கொடுக்கிறது; மாணவர்களான நீங்கள் பதற்றம் அடைய வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து தேர்வு குறித்த மாணவர்களின் கேள்விக்களுக்கும் பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார். முன்னதாக கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த வருடம் கோவிட் கட்டுப்பாடுகள் முடிந்து தற்போது பொதுத்தேர்வுகள் சற்று தாமதமாக நடக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.