டெல்லி: தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது, திருவிழாவுக்கு செல்லும் உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். டெல்லி தல்கோரா அரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை சிதறவிடக்கூடாது. ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துகிறோமா என்று தம்மை தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் கல்வி புதியவற்றை கற்றுக்கொள்வதற்கானது; நேரடி வகுப்புகள் என்பவை கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கானது. நேரடி வகுப்புகளில் கற்றுக்கொள்ளும் அதே விஷயங்கள்தான் ஆன்லைனிலும் கற்றுத்தரப்படுகின்றன. பாடத்தில் மனம் ஒன்றி இருந்தால் போதும்; கல்வி கற்கும் முறை ஒரு பிரச்சனையாக இருக்காது. பாடங்களில் கவனம் இருந்தால், எந்த முறையில் கற்றாலும் அதை உள்வாங்கி கொள்வதில் சிக்கல் இருக்காது. உலகம் முழுவதுமே திறமை முக்கியமானதாக கருதப்படுகிறது; தொழில்நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பெற்றோர் தமது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதிக மதிப்பெண் பெற பெற்றோரும், ஆசிரியரும் நெருக்குதல் தருவதாக மாணவர்கள் கருதக்கூடாது. தங்கள் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தங்கள் குழந்தைகளுக்கு எதிர் ஆர்வம், எவற்றில் திறமை பெற்றுள்ளனர் என கவனிக்க பெற்றோர் சிலநேரம் தவறிவிடுகின்றனர். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்துகொள்ள பல நேரங்களில் பெற்றோரும், ஆசிரியர்களும் தவறிவிடுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளையே பலமாக மாற்றி சாதனை படைக்கின்றனர். மாணவர்கள் தாம் எதில் பலவீனமாக இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை மூலம் கண்டுபிடிக்க வேண்டும் என்று மோடி தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பெண்கள் கல்வி கற்பனை ஊக்குவிக்காத சமுதாயம் வளர்ச்சி பெறாது. இந்தியாவில் கிராமப்புறங்களில் கல்வி வசதி மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது, திருவிழாவுக்கு செல்லும் உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதப்போவது இது முதல்முறையல்ல; ஏற்கனவே பலமுறை தேர்வு எழுதியிருப்பதால் அச்சம் தேவையில்லை என்று பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.