புதுடெல்லி: ‘தேர்வுகளை திருவிழாக்கள் போன்று கொண்டாடுங்கள்,’ என்று மாணவர்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பாக, இந்த தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி ‘பரிக்சா பே சர்சா’ எனப்படும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சி மூலமாக கலந்துரையாடி நம்பிக்கை அளித்து வருகிறார். இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: மாணவர்களாகிய உங்களை சந்திக்கும் இந்த நிகழ்ச்சிதான் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆனால், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. தொழில்நுட்பம் கல்விக்கு ஒரு தடையல்ல. அதனை திறம்பட பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் தளங்களை மாணவர்கள் அறிவை பெருக்கி கொள்வதற்காக பயன்படுத்த வேண்டும். இதனை ஆப்லைனில் செயல்படுத்த வேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் யார் டென்சனாக இருப்பது? நீங்களா அல்லது உங்கள் பெற்றோரா? டென்சன் ஆன பெற்றோர்கள் இங்கு அதிகம். தேர்வுகளை திருவிழாக்களாகவும், மனஅழுத்தம் இல்லாமலும் கொண்டாட தொடங்கினால் உற்சாகத்தை தரும். நீங்கள் முதல் முறையாக தேர்வு எழுதவில்லை. ஒரு வகையில் நீங்கள் தேர்்வை சோதித்து பார்க்கிறீர்கள். மனஉளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். இதற்கு முன்னும் நீங்கள் தேர்வில் வெற்றிகரமாக வென்றுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.கடலையே கடந்துட்டிங்க கரையில் மூழ்கவா பயம்?மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘தேசிய கல்விக் கொள்கையை நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் முழு மனதுடன் வரவேற்றுள்ளனர்,’ என்றார். இதேபோல், குஜராத்தின் வதோதராவை சேர்ந்த மாணவர் ஒருவர், ‘பாடத் திட்டத்தை முழுவதுமாக எப்படி மீண்டும் படித்து பார்க்க முடியும்? எப்படி சரியான தூக்கம் கிடைக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பிரதமர் மோடி அளித்த பதிலில், ‘‘நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் தேர்வு எழுதுவது முதல் முறை கிடையாது. தற்போது நீங்கள் கடைசி மைல்கல்லை அடைந்து விட்டீர்கள். கடலையும் கடந்து வீட்டீர்கள். கரையில் மூழ்குவதற்கு நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றார்.