நேரடி வகுப்பில் கற்பதே இணைய வழியிலும் உள்ளதால் கற்றலுக்கான வழிமுறை ஒரு தடையில்லை என்றும், கருத்தூன்றிப் படித்தால் அச்சமின்றித் தேர்வெழுதலாம் என்றும் பிரதமர் மோடி.
தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும், தேர்வு பற்றிய விவாதம் என்னும் நிகழ்ச்சி டெல்லி தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்வுகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் எனத் தெரிவித்தார்.
அஞ்சாமல் பிறரைப் பார்க்காமல் தான் படித்ததைக் கொண்டு நம்பிக்கையுடன் தேர்வெழுத வேண்டும் எனத் தெரிவித்தார்.
இணையவழியில் படிக்கும் மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் நேரத்தைப் போக்காமல் படிப்பிலேயே அக்கறை காட்ட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர், பெற்றோரின் நெருக்குதல் இல்லாத மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். பெற்றோர் தம் கனவுகளைப் பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என்றும், எதிர்காலம் பற்றிய தீர்மானத்தை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிள்ளைகளின் திறமைகளைப் பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகள் பல திறன்களைப் பெற்றுள்ளதாகவும், அவர்கள் பலவீனங்களைப் பலமாக மாற்றிக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிப் பிரதமர் வாழ்த்தினார்.