புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020தொடக்கத்தில் கரோனா வைரஸ்பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அந்த ஆண்டின் இறுதியில், தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அதே நேரத்தில் கரோனா 2-வது மற்றும் 3-வது அலையால் பாதிப்பு அதிகரித்தது. அதனால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. பின்னர், அந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், கரோனா 3-வது அலையின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்துள்ளது. இதையடுத்து, மார்ச் 31-ம் தேதியுடன் (நேற்று) கரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாகவும் கரோனாகட்டுப்பாடுகள், வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக புதிய உத்தரவுகள் எதையும் உள்துறை அமைச்சகம் பிறப்பிக்காது என்றும் மத்திய அரசு கடந்த வாரம்அறிவித்தது. அத்துடன் கரோனாபாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகளே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கரோனாகட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் இப்போது தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. எனவே, பொது இடங்களில் நாளை முதல் (2-ம் தேதி) முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா கட்டுப் பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளைமுதல் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமல்ல என்றும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே நேற்று மும்பையில் தெரிவித்தார். முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்றாலும், முன்னெச்சரிக்கையாக மக்கள் தாங்களே முன்வந்து விருப்பத்தின் பேரில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
டெல்லி, மேற்கு வங்கம்
இதேபோல, டெல்லி அரசும்கரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமல் வந்தால் இதுவரை ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்த அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க நடத்தப்பட்ட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதற்கான முடிவுஎடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதேபோல, பல்வேறு மாநிலஅரசுகளும் தங்களது மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள் வதாக அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.