ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால், தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் மயங் அகர்வால் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து தவான் 16 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ராஜபக்ச அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
லியாம் லிவிங்ஸ்டோனும் தன்பங்கிற்கு 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசி வரிசையில் களமிறங்கிய ரபாடா 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 4, டிம் சௌதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கி சிறப்பாக விளையாட தொடங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஆனால் ஆட்டத்தின் 12-வது ஓவரை வீச வந்த ஓடின் ஸ்மித் 30 ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய கொல்கத்தா வீரர்கள் ரஸல் – பில்லிங்ஸ் சிக்சர் மழை பொழிந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரஸல் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸல் 31 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார்.