புதுடில்லி: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‛உங்கள் பலவீனங்களை பலமாக ஆக்குங்கள்’ என ஊக்கப்படுத்தினார்.
மாணவர்கள் தேர்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ‛பரிக்ஷா பே சர்ச்சா’ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு மட்டும் கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்நிலையில், இந்தாண்டுக்கான (2022) ‛பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி டில்லியில் உள்ள டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் இன்று (ஏப்.,1) நடைபெற்றது. இதில், மாணவர்களின் கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார்.
இதில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றியதாவது: தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். மாணவர்கள் தேர்வின் போது பதற்றமடைவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டே இருங்கள். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன. தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட துவங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். உங்கள் பலவீனங்களை பலமாக ஆக்குங்கள்.
ஆன்லைனில் படிக்கும் போது உண்மையில் படிக்கிறீர்களா அல்லது சமூக ஊடகங்களை பார்த்து நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதை மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் கல்வியானது அறிவை அடைவதற்கான கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதே சமயம் ஆப்லைன் கல்வியானது அந்த அறிவை நிலைநிறுத்துவது மற்றும் நடைமுறையில் அதை மேலும் செயல்படுத்துவது பற்றியது. தேசிய கல்விக் கொள்கை மசோதா தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக நாங்கள் அதைப் பற்றி ஆலோசித்தோம். காலத்திற்கு ஏற்றார்போல் நாம் மாறவேண்டும்.
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தியுள்ளோம். தொழில்நுட்பம் ஒரு சாபக்கேடு அல்ல, அதை திறம்பட பயன்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் தொழில்நுட்ப திறமைகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் பல தொழில்நுட்ப செயலிகளை உருவாக்கலாம். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு திறமை இருக்கிறது. இன்று மாணவர்கள் வேத கணிதத்திற்கான 3டி பிரிண்டர்களை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.
நேர நெருக்கடியால் பல மாணவர்களின் கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியவில்லை. மாணவர்களின் கேள்விகளுக்கு வீடியோ அல்லது ஆடியோ மூலமாக நமோ செயலி வாயிலாக பதிலளிப்பேன். நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக மாணவர்கள் உணரக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் புகுத்தக்கூடாது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Advertisement