மாதம் ஒரு முறை பள்ளி கல்லூரி மாணவர்களுடன் உரையாட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று தாக்குதல் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வாரம் ஆறுநாள்கள் சிறப்பாக இயங்கிவருகிறது.
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும் அதை காணொளியாக்கி சமூக வளைதலங்களில் பரப்புவதும் தொடர்கதையாகிறது.
இதன் மூலம் மற்ற மாணவர்களும் மனரீதியாக தங்களை மாற்றிக்கொள்வது வேதனையளிக்கிறது. மாணவர்களுக்கு வழிகாட்டுதல் அறிவுரை பகிர்தல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இன்றைய நிலையில் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதிகள் ஒரளவு இருக்கிறது. இந்த வசதிகளை கொண்டு சிறந்த மனநல மருத்துவர் அறிஞர்களை பேச வைத்து மாணவர்களை கேட்க வைக்க வேண்டும்.
குறிப்பாக மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உற்சாகப்படுத்தும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் ஆகியோர் காணொளி வாயிலாக மாணவரகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவேண்டும்.
தேர்வு தொடங்க இருக்கும் இச்சூழலில் பொதுத் தேர்வை எதிர்கொள்வது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக அறிவுரைகள் மற்றும் வாழ்த்துகள் தெரிவித்திடவும் இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தையும் தன்னம்பிக்கையோடு படிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தமுடியும்.
வருங்காலம் சிறப்பாக அமைய மாணவச்சமுதாயத்தை நல்வழிபடுத்துவது தொடர்ந்து நடப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக கொரோனா மாற்றிவிட்டது.
முதலமைச்சர் அவர்களின் கருத்துரை காணொலி மூலம் கேட்கும்போது மாணவர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் என்பதால் மாண்புமிகு முதல்வர் அவர்களும், மனநல ஆலோசகர்களும் தன்னம்பிக்கை உரையாற்றினால் தற்காலச் சூழலில் நல்வழிபடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.