புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் கில் மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வின்போது மணமகள் மற்றும் மணமகன் தரப்பிலிருந்து தலா 50 விருந்தினர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும். இதனால், இந்திய மக்களின் சேமிப்பை நாம் பாதுகாக்க முடியும்.
இந்தியாவில் சில திருமண விழாக்களில் 289 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. உணவுக்கென்று ஒரு நபருக்கு ரூ.2,500 செலவிடப்படுகிறது. எனவே, விருந்தினர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாது உணவு வகைகளிலும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். 11 வகைகளுக்கு மேல் உணவுகள் இருக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதால் அரசுக்கு ஒன்றும் இழப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு பயனிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அதையெடுத்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,‘நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இந்த மாற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இதற்குச் சட்டம் தேவையில்லை. மன உறுதி வேண்டும்’ என்றார்.