மதக்கலவரத்தை தூண்டும் வகையில், வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து விட்டதாக கைது செய்யப்பட்ட, தமிழக பாஜக கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் கல்யாணராமன். இவர் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து மத கலவரத்தை தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை விதைக்கும் வகையிலும் பதிவிட்டு வந்ததாக கூறி, கடந்த அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அக்டோபர் 23ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து கல்யாணராமன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கல்யாணராமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.