சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழா ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் முதல்வர் நேற்று பிற்பகல் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு உள்ளிட்ட எந்த ஒரு அணை கட்டும் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜல்சக்தி அமைச்சகத்துக்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதுடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
தல்சேர் மற்றும் ஐபி வேலி பகுதியில் இருந்து தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டுவருவதற்கு கூடுதலாக ரயில் ரேக்குகளை ஒதுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி வரை நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடான ரூ.13,504.74 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜூன் மாதத்துடன் முடியும் இழப்பீட்டு காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்காவது நீட்டிக்க வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு
மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே, மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும். உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வழிவகைகளை கண்டறிய வேண்டும்.
பிரதமரின் வேளாண்மை பயிர் பாதுகாப்பு திட்டத்தில் மத்திய அரசின் பங்கு பிரீமியம் தொகையை முந்தைய அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்த்த வேண்டும். 2020-21 ராபி பருவத்துக்கான மத்திய அரசின் பிரீமியம் மானியத்தை விடுவிக்க வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (டிடிஐஎஸ்) தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்தில், 2 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும்.
சேலம் இரும்பு ஆலையில் உள்ள கூடுதல் நிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்காவுக்காக தமிழக அரசுக்கு விரைவாக வழங்க வேண்டும். சென்னை அடுத்த மப்பேட்டில் அமையும் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்குக்கு 11 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.
கல்விக் கொள்கை
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத பங்கு அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்திய அணுக்கழிவுகளை அங்கிருந்து அகற்றி ரஷ்யாவுக்கே திருப்பிஅனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு
பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் சந்தித்து தனித்தனியாக துறைகள் தொடர்பான மனுக்களை அளித்தார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு. உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை முதல்வர் இன்று சந்திக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, பேசியுள்ளார். அதேநேரம், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் பெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் திமுக தரப்பு ஈடுபட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்குவது, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து சோனியாவுடனான சந்திப்பின்போது ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரையும் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.