தன்னை தாக்கிவிட்டதாகப் புகார் அளித்தவரின் மனுவை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சார்ந்தவர் பிரகாசம். இவர் செந்துறை தி.மு.க ஒன்றிய பிரதிநிதியானவர். இவருக்கு இடப் பிரச்னை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வராஜ் என்பவரும் மேலும் 5 பேரும் பிரகாசத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
செந்துறை காவல்நிலையம் தொடங்கி ஆட்சியர், எஸ்.பி வரையிலும் புகார் கொடுத்திருக்கிறார். கடைசி வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிரகாசம் தொடுத்த வழக்கின் பேரில், `இவ்வளவு காயத்துடன் ஒரு மனிதர் புகார் கொடுத்திருக்கிறார். ஏன் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை?’ என அரியலூர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இது தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன்,
“பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஒரு மாதத்திற்குள் ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகையாகப் பிரகாசத்திற்கு வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ராஜ்குமார் கரூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது