வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி கலால் வருமானம் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை கடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், கள்ளுக்கடைகள்- 50, சாராயக்கடைகள் – 80, மதுபான கடைகள் – 284 உள்ளன. மாநிலத்தின் வருவாயில், கலால் துறை பெரும் பங்காற்றுகிறது. கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கலால் வருவாய் பெரிதும் பாதித்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் கலால் வருவாய் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது குறித்து கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கூறியதாவது:
கடந்த 2021-22 நிதியாண்டு துவக்கத்தில் 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், 1063 கோடி ரூபாய் வருமானத்தை கலால் துறை ஈட்டி உள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம் எனப்படும் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்கள் மீதான கலால் வரி மூலம் 778 கோடி ரூபாய், பீர் மீதான வரி மூலம் 151 கோடி, சாராய கிஸ்தி தொகை மூலம் 63 கோடி கிடைத்தது. புதுப்பித்தல் பிராண்ட் லேபிள் பதிவு மூலம் 60.5 கோடி, அபராதம் 1.22 கோடி, இதர வரிகள் மூலம் 6.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. புதுச்சேரி கலால் துறை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.
20 சதவீத சிறப்பு வரி, மது கொள்முதல் முதல் விற்பனை வரை பல்வேறு நிலைகளில் ‘செக் பாயின்ட்’ அமைத்து கண்காணித்ததால் அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ளது.பல குழுக்களை நேரடியாக மதுக்கடைகளுக்கு அனுப்பி, இருப்புகளை சோதனை செய்தோம். சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டோம். இதன் காரணமாக கலால் வருவாய், முதல் முறையாக 1000 கோடி ரூபாயை கடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement