மும்பை: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம் தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். பாலிவுட் நடன இயக்குனர் மற்றும் நடிகர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக மும்பை காவல்துறை பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த 2020ம் ஆண்டில் பெண் நடனக் கலைஞர் ஒருவர் (35), கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருந்தார். அதில், ‘நடனத்தில் வெற்றி பெறவேண்டுமானால் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கணேஷ் ஆச்சார்யா கூறினார். அதற்கு நான் மறுத்ததால் அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். அதன்பின் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து என்னை வெளியேற்றினார். இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி அவரது உதவியாளர்களை கொண்டு என்னைத் தாக்கினார்’ என்று கூறியுள்ளார். அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு பதிய ஓஷிவாரா காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது ஐபிசி 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, 504, 506, 34 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர். முன்னதாக நீதிமன்றத்தில் பெண் நடனக் கலைஞர் புகார் கொடுத்த போது கணேஷ் ஆச்சார்யா அளித்த பேட்டியில், ‘என் மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்; ஆதாரமற்றது’ என்றார். தற்போது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதால், கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் குழு, முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.