சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பைக் ரேஸ் என்பது மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. பலருக்கும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்பது புரிவதில்லை. மிகவும் சிறிய வயதில், இப்படியாக ரேஸ் ஓட்டி உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகின்றன நிலையில், உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
எல். ப்ரவீன் என்ற நபர், மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ப்ரவீன் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று விண்ணப்பிக்க, ஒரு மாதம் பரோல் அளித்து, கூடவே ஒரு “செக் பாய்ண்ட்டையும்” வைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
“ஸ்டான்லி மருத்துவமனையில் அமைந்திருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில், மனுதாரர் தன்னுடைய ஒரு மாத பரோல் காலத்தில் பணியாற்ற வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன். அடுத்த 30 நாட்களுக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ப்ரவீன் காலை 8 மணிக்கு சென்று 12 மணி வரை, வார்ட் பாய்களுக்கு உதவியாக, சிகிச்சைக்கு வரும் மக்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு நாள் பணி முடிவின் போதும் தன்னுடைய அனுபவத்தை ஒரு பக்க அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். இந்த ஒரு மாத சேவை முடிந்த பிறகு அந்த அறிக்கைகள் ஜார்ஜ் டவுனில் உள்ள 3வது மாநகர மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.
மூலக்கொத்தளம் பகுதியை நோக்கி மூன்று பேர் பைக் ரேஸ் நடத்திய போது, ஸ்டாலின் மருத்துவமனை அருகே விபத்து ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையிலும் நடந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை போக்குவரத்து விசாரணைப் பிரிவு காவல்துறையினர் ப்ரவீனை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.