இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இதில் பங்கெடுத்து வருகின்றனர்.
என்.சங்கரய்யா, மோகன், நன்மாறன் போன்ற தன்னலமற்ற தலைவர்களுடன் கே.பி. ஜானகியம்மாள் முதல் லீலாவதி போன்ற ஒப்பற்ற பெண் தியாகிகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தந்த மண் மதுரை.
ஜாதி, மதங்களுக்குள் சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும், அவர்களின் உரிமையை மீட்டெடுப்பதை கொள்கையாகவும் கொண்டுள்ளதால் கிராமம் முதல் நகரம் வரை அதிகமான பெண்கள் இக்கட்சியில் உள்ளனர் என்பதை மாநாட்டுக்கு வந்திருந்த பெண்கள் கூட்டத்தை வைத்து அறிய முடிந்தது.
கடந்த 30-ம் தேதி மாலை நடந்த பேரணியில் சிவப்பு சீருடை அணிந்து தியாகி லீலாவதி படைப்பிரிவு என்ற பதாகையுடன் பெண்கள், சிறுமிகள் ராணுவ மிடுக்கோடு நடந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.
அதிலும் அந்த செஞ்சட்டை பேரணியில் லெஃப்ட், ரைட் போட்டுக்கொண்டு கம்பீரமாக நடந்து வந்த 10 வயது சிறுமி அனைவரையும் ஈர்த்தார். அவருடைய சுறுசுறுப்பான, பக்குவமான நடவடிக்கை அனைவருக்கும் பிடித்திருந்தது.
கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவரை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்கள். இது குறித்து தன் முகநூலில் பெருமிதத்துடன் பதிவிட்டிருந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜிடம் அச்சிறுமி குறித்துக் கேட்டோம்.
“கம்யூனிஸ்ட் தோழர்களின் குடும்பங்களில் குழந்தைகளும் அந்த சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு சிறுமி லக்ஷ்மிதா ஒரு உதாரணம். அவர் நாளைய நம்பிக்கை. லக்ஷ்மிதா, அந்தியூர் சிபிஎம் கவுன்சிலர் கீதா சேகரின் மகள் என்பது பின்புதான் தெரிந்தது” என்றார்.
“பாலின சமத்துவத்தை, பெண்ணுரிமையை கொள்கையாகக் கொண்ட கட்சியில் பெண்கள் முதல் சிறுமிகள் வரை களம் இறங்குவது மிகுந்த உற்சாகம் தருகிறது” என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் பெருமையுடன்.