தன் மனைவிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் ஓதவ் பகுதியில் வசித்துவந்தவர் வினோத் ஜெய்க்வாட். இவருக்கு சோனால்பென் என்ற மனைவியும், 17 வயதில் கணேஷ் என்ற மகனும், 15 வயதில் பிரகதி என்ற மகளும் இருந்தனர். இவர் தனது குடும்பத்துடன் ஓதவ் பகுதியில் வசித்து வந்தார். இவரது வீட்டில் சோனால்பென்னின் பாட்டி சுபத்ராபென்னும் வசித்து வந்தார்.
இந்நிலையில், சோனால்பெனின் தாயார் சஞ்சுபென் அகமதாபாத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருப்பதாகவும் கூறி, காவல்துறையை அணுகினார்.
சாதாரண வழக்காக கருதி சோனால்பென் வீட்டின் பூட்டை உடைத்தபோது, ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் 4 பேர் உடல் கிடப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது, சில நாட்களுக்கு முன்னர் நால்வரும் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. சோனால்பென் கணவர் வினோத் கெய்க்வாட் மட்டும் காணவில்லை என்பதால், விசாரணையை அவரை நோக்கி திருப்பியது காவல்துறை. அவர் செல்போன் சிக்னலை வைத்து அவரை கண்காணிக்கத் துவங்கினர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து குஜராத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்தில் வைத்து வினோத்தை கைது செய்தனர் காவல்துறையினர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கொலை செய்ததாகவும், பின்னர் குற்றத்தை மறைக்க இரண்டு குழந்தைகளையும் மனைவியின் பாட்டியையும் கொன்றதாகவும் வினோத் போலீசாரிடம் கூறினார். குற்றத்தை வினோத் ஒப்புக்கொண்டதால் அவரை விரைவில் நீதிமன்றட்த்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM