காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே 2வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் உருண்டு விழுந்த வடமாநில தொழிலாளியின் காலில் கம்பி குத்தி அவர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொடவூர் கிராமத்தில் கட்டுமானப் பணிகள் பாதியில் கைவிடப்பட்ட இரண்டடுக்கு கட்டடத்தின் காவலாளியாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் என்பவர் பணியாற்றி வந்தார். பணியை முடித்துவிட்டு இரவு இரண்டாவது மாடியில் படுக்கச் சென்றவர், காற்றோட்டத்துக்காக கட்டிடத்தின் விளிம்புப் பகுதியில் படுத்து தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் உருண்டவர், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். முதல் மாடியில் நீட்டிக் கொண்டிருந்த உருட்டுக் கம்பிகளில் ஒன்று அவரது இடது முழங்காலில் குத்தி வெளியே வந்தது. அந்தரத்தில் தொங்கியவாறு வலியில் துடித்துள்ளார் பிரேம்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கம்பியின் இரண்டு பக்கங்களையும் கட்டிங் இயந்திரம் கொண்டு துண்டாக்கி, பிரேமை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது முழங்காலில் சிக்கியிருந்த இரும்புத் துண்டு அகற்றப்பட்டது.