திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கலை விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வந்தது.
இந்த நிகழ்ச்சியை பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று மாணவ- மாணவிகளின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி விழா அரங்கில் பல்வேறு குழுக்களை சேர்ந்த மாணவிகள் இறுதி கட்ட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு குழுவினர் நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் சந்தித்து பாராட்டினார். அப்போது மாணவிகள் சிலர் கலெக்டரையும் நடனமாடும் படி கேட்டுக்கொண்டனர். அவரும் உடனே மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினார்.
இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் தனது கல்லூரி நாட்களில் இதுபோன்ற பல்வேறு கலை விழாக்களில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். மேலும் அவருக்கு கதகளி, குச்சுபுடி, ஒடிசி மற்றும் பரதநாட்டியம் போன்றவையும் தெரியும். கலெக்டர் ஆன பின்பும், மாணவிகளுடன் சேர்ந்து அவர் நடனமாடியதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.