புதுடெல்லி: மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கான தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த தலா 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கேரளாவில் இடது முன்னணிக்கு 2 இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது.
பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, கேரளா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் 5 பேர், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாஜகவைச் சேர்ந்த தலா 1 உறுப்பினர் என 7 பேர் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 7 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதில் கேரளாவில் இடது முன்னணியின் 2 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். இதுபோல அசாமில் 2, திரிபுராவில் 1 என பாஜகவைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர்.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் சில மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே 2 உறுப்பினர்களை அசாமிலும், இமாச்சல பிரதேசத்தில் ஒரு உறுப்பினரையும் காங்கிரஸ் இழந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சத்தா, ஐஐடி பேராசிரியர் சந்தீப் பாதக், லவ்லி புரொபெஷனல் பல்கலைவேந்தர் அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சய் அரோரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அசாமிலிருந்து பாஜக செய்தித் தொடர்பாளர் பபித்ரா மர்கெரிட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் தோழமைக் கட்சியான ஐக்கியமக்கள் கட்சியின் (யுபிபிஎல்) ஆர். நர்ஸரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெண் வேட்பாளரான ஜெபி மாதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
– பிடிஐ