மாநிலங்களவையில் 72 பேர் ஓய்வு: நினைவுகளை பகிர்ந்துகொண்ட எம்.பி.க்கள்- நெகிழ்ச்சியான தருணம்

மாநிலங்களவை எம்.பி.க்கள் 72 பேர் ஓய்வுபெறுவதையொட்டி நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில், கட்சி எல்லைகளை கடந்து சக எம்.பி.க்கள் தங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான எம்.பி.க்கள் உணர்ச்சிவசப்பட்டாலும், சில நெகிழ்வான தருணங்களும் இருந்தன.
நாடாளுமன்றம் என்றாலே கூச்சல், குழப்பம், அமளி, வெளிநடப்பு, ஒத்திவைப்பு என்பதையே அதிகம் கேள்விப்படும் நிலையில், மாநிலங்களவையில் நேற்று உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை காணமுடிந்தது. ஜூலை மாதத்திற்குள் ஓய்வுபெறும் தமிழகம் உள்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த 7 நியமன உறுப்பினர்கள் உள்பட 72 பேருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர, பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமன், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
image
பிரியாவிடை தருணங்கள் எப்போதும் உணர்ச்சிகரமாகவும், வேதனையாகவும் இருக்கும் என்று நிகழ்ச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசினார். காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா தன்னிடம் அடிக்கடி பேனா வாங்குவதை நினைவுக்கூர்ந்த அவர், நாளை முதல் தன்னிடம் பேனா கேட்கமாட்டேன் என்று கூறியதையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். பிரிவு உபசார விழாவில் திருச்சி சிவா உள்ளிட்டோர், ஷாருக்கான் நடிப்பில் 2006ல் வெளியான KABHI ALVIDA NAA KEHNA என்ற ஹிந்தி படத்தில் வரும் பிரபலமான பாடலைப் பாடி சக எம்.பிக்களுக்கு விடை கொடுத்தனர்.
image
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அறிவைவிட அனுபவத்திற்கே அதிக சக்தி உண்டு என்றும், ஓய்வுபெறும் எம்.பி.க்கள் நாட்டின் நலன்களுக்காக அனுபவத்தை நான்கு திசைகளுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனுபவம் வாய்ந்தவர்கள் ஓய்வுபெறும்போது மீதமுள்ளவர்களின் பொறுப்பு அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக ஓய்வுபெறும் எம்பிக்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.