மாறாத தாலிபான்கள்… மவுனத்தில் உலகம்!

ஆகஸ்ட் 15, 2021. ஆப்கானியர் அலற, உலகம் அந்த மக்களுக்காக பரிதாபப்பட்ட நாள். அன்றுதான் தாலிபான் தீவிரவாதிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். நாட்டின் தலைநகரான காபூல் நகரமும் அவர்கள் கையில் வீழ்ந்த நாள்!

நாட்டிலிருந்து தப்பித்தால் போதும் என விமான நிலையத்தை நோக்கி மக்கள் ஓடினார்கள்; உள்ளூர் பேருந்தைப் போல விமானத்தைப் பாவித்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஏற முற்பட்டார்கள்; விமானத்தின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்ற சிலர், கீழே விழுந்து மரணித்தார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்னும் பரிதவிப்பே இந்த மரணத்திற்குக் காரணம். தாலிபான்களின் முந்தைய ஆட்சி அவ்வளவு மோசமாக இருந்தது.

1996-2001 வரையிலான அவர்களது ஆட்சியில் நடந்த கொடூரங்கள் ஏராளம். தாங்கள் சந்தேகப்படும் நபர்களைப் பொது இடங்களில் வைத்துக் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள்; தலையில் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல வகையில் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டன.

பெண்கள் பள்ளிக்குப் போகக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாது; வெளியில் செல்லும்போது ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும்; அதுவும் முழுவதும் மூடிய பர்தாவுடன் செல்ல வேண்டும்… இப்படி நிறைய கட்டுப்பாடுகள். தாடி வைத்திருப்பது அவசியம் என்பது உட்பட ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள். இவற்றை மீறினால் தண்டனைதான். தண்டனை என்பது கொலைதான். அதோடு, கடும் பஞ்சம், பட்டினி. தவிர, பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்தக் கிடங்காக இருந்தது அந்நாடு. உலகை அதிரவைத்த அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குல் அந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அங்கிருந்தபடிதான் இத்தாக்குதலைத் திட்டமிட்டார், அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன்.

அதன்பிறகுதான் தாலிபான் தீவிரவாதிகளின் மீதான போரில் இறங்கியது அமெரிக்கா. மலைப் பகுதிகளில்
தாலிபான்கள்
பதுங்க, புதிய அரசு அமைந்தது.

தொடர்ந்து தாலிபான்களை அழிக்கும் நடவடிக்கைகளில் இருபது ஆண்டுகளாக அமெரிக்கா ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து 2021 ஆகஸ்ட் 15இல் தாலிபான்கள் மீண்டும் ஆப்கனைத் தங்கள் வசம் கொண்டுவந்தார்கள். செப்டம்பர் மாதம் தங்களது ஆட்சியை அதிகாரப்பூர்வமாக நிறுவினார்கள். பிரதமராக முல்லா ஹசன் அகுந்த், துணைப் பிரதமர்களாக முல்லா அப்துல் கனி பரதர், முல்லா அப்துல் சலாம், பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா முகம்மது யாகூப் பதவியேற்றனர். மொத்தம் 19 பேரை உள்ளடக்கிய ஆப்கன் அரசு பதவியேற்றது.

ஆட்சிக்கு வந்தவுடனேயே, ‘கடந்த ஆட்சி போல் இருக்காது. கடும் தண்டனைகள் இருக்காது; பெண்களை அடிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் இருக்காது’ என ஏகப்பட்ட உறுதி மொழிகள்.

அதையெல்லாம் உள்நாட்டு மக்களோ உலக மக்களோ நம்பவில்லை. அந்த அவநம்பிக்கையத் தாலிபான்களும் காப்பாற்றினார்கள். மீண்டும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் நடைமுறைக்கு வந்தன. 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டனர். நாளாக நாளாக, இந்த தூரம் குறைந்துகொண்டே வந்து, இறுதியில் பூஜ்ஜியத்தை அடைந்தது.

ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் தலைகாட்டவே கூடாது. அப்படிச் சென்றாலும் முகம் உள்ளிட்ட முழு உடலையும் மறைத்துச் செல்ல வேண்டும். பெண்களுக்குக் கல்வியும் பணிசெய்யும் உரிமையும் மறுக்கப்பட்டன.

ஓரிரு நாட்களுக்கு முன் அவர்களது இன்னொரு ‘சட்டம், ‘ பெண்களை மேலும் இறுக்கி உள்ளது. விமானப் பயணத்தின் போது மட்டும் பெண்கள் தனியாக செல்லலாம் என விலக்கு கொடுத்திருந்தனர் தாலிபான்கள். இப்போது அதற்கும் தடை. இனி ஆண்களின் துணையோடுதான் பெண்களுக்கு விமானப் பயணம் என உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

சமீபத்தில், ‘பெண்களுக்கு கல்வி என்பதே தேவையில்லை’ என் தாலிபான்கள் அறிவித்த போது, 13 வயதான அடீபா ஹைதரி என்ற சிறுமி கதறியது நினைவுக்கு வருகிறது. அவர், “தாலிபான் இம்முறை தங்களது மத சட்டத்தில் பல்வேறு முற்போக்கான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக கூறினார்கள். பெண் கல்விக்கு இம்முறை தடை இல்லை என்றார்கள். அந்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றவில்லை. நான் மட்டுமல்ல என்னுடன் படிக்கும் சக மாணவிகளும் தாலிபான்கள் மாறிவிட்டனர் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் இன்னும் திருந்தவில்லை” என்றார் அழுதபடியே.

ஆப்கனில் தாலிபான்கள் அடக்குமுறையை, உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது; இதைக் காலம் கவனித்துக்கொண்டே இருக்கிறது.

20 ஆண்டுகள் அங்கே இருந்த அமெரிக்கா அந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தது? எந்த தாலிபான்களை ஒடுக்க அங்கே சென்றதோ அதே தாலிபான்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டது. இன்று
ஆப்கானிஸ்தான்
இருக்கும் நிலைக்கு அமெரிக்காவும் அதன் ஆப்கன் போரை ஆதரித்த நாடுகளும் பொறுப்பு இல்லையா? மனித உரிமைகள் ஆப்கன் மக்களுக்கு இல்லையா? அங்கு நடக்கும் அடக்குமுறைகளை உலகம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?

ஆப்கன் மக்களுக்கு விடிவு எப்போது வரும்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.