மும்பை: முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி நடிகை ரிமி சென்னிடம் ரூ. 4.14 கோடி மோசடி செய்த டுபாக்கூர் தொழிலதிபர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த கோரேகானைச் சேர்ந்த தொழிலதிபர் ரவுனக் ஜதின் வியாஸ் என்பவர் சிறிய அளவிலான நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்தேரியில் உள்ள ஜிம்மில் பாலிவுட் நடிகை ரிமி சென் சந்தித்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் நடிகையிடம் பணம் கறக்க முடிவு செய்த தொழிலதிபர், ‘எங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்’ என்று கூறினார். அதனை நம்பிய நடிகை, அவரது நிதி நிறுவனத்தில் சில லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். ஆனால், முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கான வட்டியோ அல்லது அசலோ திருப்பி தரவில்லை. அதிர்ச்சியடைந்த நடிகை, தொழிலதிபர் மீது கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தன்னை தொழிலதிபர் என்றும், நிதிநிறுவனம் நடத்தி வருபவர் எனக் கூறி என்னிடம் ரூ. 4.14 கோடி மோசடி செய்த ரவுனக் ஜதின் வியாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து ரவுனக் ஜதின் வியாஸ் மீது ஐபிசி 420 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தி, பெங்காலி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வரும் நடிகை ரிமி சென், தொலைக்காட்சி ஷோக்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.