முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.
வீதி, நீர்ப்பாசனம், போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், காணி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் எல்லைப்படுத்தும் முகமாக எல்லைக்கல்லிடலினை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் எட்டப்பட்டதுடன், நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் தெங்கு பயிர்ச்செய்கையினை ஊக்குவித்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
மாவட்டத்தில் நன்னீர் நீலைகளை உருவாக்கி நீர் வளத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் இந்த வருடத்தில் உளுந்து பயிர்ச்செய்கை விவசாய பாதிப்பு தொடர்பாக துறை சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.