வார்சா:
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கீவ் புறநகர்ப்பகுதிகள் மற்றும் பிற முன்கள பகுதியில் சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய ராணுவ வீரர்கள் வெளியேறினர்.
ஆனால், கடுமையாக மாசுபட்ட அப்பகுதியில் ரஷிய வீரர்கள் அகழிகளை தோண்டியபோது கதிர்வீச்சு தாக்கத்தை எதிர்கொண்டதால் அணு உலையை விட்டு வெளியேறியதாக உக்ரைன் மின் நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில், செர்னோபில் அணு உலையை விட்டு ரஷியர்கள் அனைவரும் வெளியேறியதால், அப்பகுதியை சோதனையிட உள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்னோபில் அணு உலை மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஆக்கிரமித்திருந்த ரஷியர்கள் அங்கு என்ன செய்தார்கள்? என்பதை கண்டறிந்து, ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் அதை தணிக்க ஐ.நா அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து அரசு செயல்படும் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை மந்திரி திமித்ரோ குலேபா கூறி உள்ளார்.
‘ரஷியர்கள் நான்கு வாரங்களுக்கு மேலாக அந்த இடத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். அணு உலையில் உள்ள ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அசுத்தமான பகுதிகளில் அகழிகளைத் தோண்டி உள்ளனர். ரஷிய அரசு, அதன் வீரர்களுக்கு கதிர்வீச்சு தாக்கத்தால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அம்பலப்படுத்தி உள்ளது’ என்றும் திமித்ரோ குலேபா கூறினார்.