புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வந்துள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் ஐதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியையும், லாவ்ரோவ் சந்தித்து உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்தார்.
உக்ரைனுடன் ரஷியா நடத்திய வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை குறித்து மோடியிடம், லாவ்ரோவ் விளக்கியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் போரை விரைவில் நிறுத்துமாறு ரஷியாவிற்கு அழைப்பு விடுத்தார். உக்ரைன்- ரஷியாவிற்கு இடையேயான மோதலுக்கு தீர்வு காணும், அமைதி முயற்சிகளுக்கு பங்களிக்கவும்
இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியா-ரஷியா இருதரப்பு உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் மோடியிடம், ரஷ்ய வெளியுறவு மந்திரி விவாதித்தாகவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருவதுடன், ரஷியாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்திய கைதிகள் உள்ளனர்- மத்திய அரசு தகவல்