உக்ரைன் மீதான போருக்கு பின்னர், ரஷ்ய நாணயத்தில் மட்டுமே இனி ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்ற விளாடிமிர் புடினின் முடிவு அமுலுக்கு வந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதன்மையான நாடுகளால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தமக்கு எதிரான, தம்மால் ஆதாயம் பெறும் நாடுகளுக்கு பேரிடியாக புதிய கொள்கையை வெளியிட்டது.
அதில், ரஷ்யாவின் ரூபிள் பண மதிப்பிலேயே இனி எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார்.
விளாடிமிர் புடினின் இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால், ரஷ்யா இன்று ஐரோப்பாவின் எரிவாயு விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, விளாடிமிர் புடினின் இந்த ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை உண்மையில் மிரட்டல் விடுப்பதற்கு ஒப்பாகும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது.
இதனிடையே, ரஷ்ய எரிவாயு வாங்கும் வெளிநாட்டினர் ரூபிளில் செலுத்த வேண்டும் என்ற ஆணையில் கையெழுத்திட்டதாக புடின் கூறியுள்ளார்.
மேலும், ரூபிளில் செலுத்த மறுக்கும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த கடும்போக்கு முடிவால் ஐரோப்பிய ஒன்றியம் கண்டிப்பாக பாதிப்புக்கு உள்ளாகும் என ரஷ்ய வெளிவிவகார அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிபொருள் மற்றும் எரிவாயுவை கைவிட விரும்புகிறது, ஆனால் அது எரிபொருளின் விலையை மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டும், எரிவாயு விநியோகம் காரணமாக போதுமான வருவாய் ஈட்டி வந்துள்ளது ரஷ்யா.
மட்டுமின்றி, உக்ரைன் இராணுவத்தின் கடுமையான பதிலடியை எதிர்கொண்டுள்ள புடின், எரிசக்தி தொடர்பில் ரஷ்யாவை நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய வங்கிகளில் ரூபிள் கணக்குகளைத் திறக்க வேண்டும்.
இந்தக் கணக்குகளில் இருந்துதான் நாளை முதல் விநியோகிக்கப்படும் எரிவாயுக்கான பணம் செலுத்தப்பட வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
அவ்வாறு பணம் செலுத்தப்படாத ஒப்பந்தங்கள் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் எனவும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரூபிள் கொடுப்பனவுகளுக்கான புட்டினின் கோரிக்கையானது ஏற்கனவே யூரோ அல்லது டொலர்களில் உள்ள ஒப்பந்தங்களை மீறுவதாக இருக்கும் என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் கூறுகின்றன.
தற்போது இந்த விவகாரம் ஐரோப்பாவில் பூதாகரமாக வெடிக்கும் என்றே அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.