புதுடில்லி : ”ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம், ரஷ்யா உதவியுடன் இயங்கி வருகிறது. இதற்காக, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை ரஷ்யா வழங்கி வருகிறது. இதில் உள்ள இரண்டு அணு உலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 3 மற்றும் 4; 5 மற்றும் 6 அணு உலைகள், கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் நடந்து வந்தன
இந்நிலையில், ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., – எம்பி., அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ் இதுகுறித்து நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய, மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருவதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய உபகரணங்கள், இந்தியாவுக்கு வந்தடைய தாமதம் ஆகலாம். இதனால், கூடங்குளம் திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிவது சந்தேகம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement