கீவ்:உக்ரைனில், ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில், கதிர்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளனர்.
இதற்கிடையே ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் பிப்ரவரி 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த போரில்,இருதரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந் நிலையில்,போரின் துவக்கத்தில் கைப்பற்றப்பட்ட,உக்ரைனின் வடக்கில் உள்ள செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் இருந்து, ரஷ்ய படையினர் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த அணுசக்தி நிலையத்திற்கு அருகே குழி தோண்டப்பட்டதால், கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று அதிகாலை, அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறியதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவின் பெல்கோ ரோட் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கை குறிவைத்து, ஹெலிகாப்டர்கள் வாயிலாக தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் மீது ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்த வான்வழித் தாக்கு தலில், பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் இந்த நடவடிக்கை, இருநாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரை மேலும் தீவிரமடைய வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
Advertisement