உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி 37 நாட்கள் ஆகும் நிலையில் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது உக்ரைன் படைகள்.
ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ளது பெல்கொரோடு நகரம். இந்த நகரத்தில் மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இந்த எண்ணெய்க் கிடங்கைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுளது. இதில் அந்தக் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. பெல்கொரோடு மாகாண ஆளுநர் க்ளாட்கோவ் கூறுகையில், எண்ணெய்க் கிடங்கு தீ பிடித்து எரிகிறது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறி தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
செர்னோபில் அணு உலைப் பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் விலகின. இதனால் அந்தப் பகுதி மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உக்ரைனில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். 4 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்த அளவுக்கு அகதிகள் வெளியேறுவது இதுவே முதன்முறை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் என்ன நடக்கிறது என்ற முழு விவரத்தை ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ ஜெனரல்கள் தெரிவிக்கவில்லை என்று பரவிய செய்திகளை ரஷ்யா திட்டமிட்டு மறுத்துள்ளது.
கேஸ் விநியோகம் நிறுத்தப்படுமா? இனி ரஷ்யாவிடமிருந்து கேஸ் பெற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரூபிளில் தான் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ விளக்கமளித்துள்ளார்.
கேஸ் விநியோகம் இன்றிலிருந்து (ஏப் 1) நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறு. ஏப்ரல் இரண்டாம் பாகத்தில் இருந்து இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றார்.
அதேவேளையில், தங்கள் மீது பல்வேறு தடைகளையும் விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு கோதுமை உள்ளிட்ட விளை பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா உலகிலேயே கோதுமை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.