புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது.
முன்னதாக செர்கெய் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா ஆயுதங்கள் உள்ளிட்ட வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தியா ஒரு முக்கியமான தேசம். இந்தியா ஒருவேளை உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தால் மகிழ்ச்சியே. இந்தியா எங்களின் பொதுவான கூட்டாளி. நாங்கள் உக்ரைனுடன் பாதுகாப்பு நிமித்தமாகவே பேசி வருகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் இதனை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டன. இந்தியா விரும்பினால் மத்தியஸ்தம் செய்யலாம். இந்தியா எங்களிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை அமெரிக்க விரும்பாது. ஆனால் அமெரிக்க அழுத்தத்தால் இந்திய, ரஷ்யா உறவு எவ்விதத்திலும் பாதிக்காது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷ்யாவும் அப்படித்தான் செயல்படுகிறது. ஆனால் அமெரிக்கா பல நாடுகளையும் தனது அரசியல் கொள்கையைப் பின்பற்றுமாறு நிர்பந்தித்து வருகிறது.
நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகிறோம் ஆனால் உலக நாடுகள் எங்கள் ராணுவ நடவடிக்கையை போர் என்றழைப்பது ஏற்புடையது அல்ல.
அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மோடியும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நான் ரஷ்ய அதிபருக்குத் தெரிவிப்பேன். மேலும் எங்கள் அதிபரின் வாழ்த்துகளை பிரதமரை நேரில் சந்தித்துக் கூறுவேன்” எனக் கூறியிருந்தார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். கடந்த சில வாரங்களில் பிரிட்டன், சீனா, ஆஸ்திரியா, க்ரீஸ், மெக்சிகோ நாடுகளில் இருந்து முக்கியத் தலைவர்கள் இந்தியா வந்தனர். ஆனால் அவர்கள் யாரையுமே பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இந்நிலையில், இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் வருகைக்கு முன்னதாக அமெரிக்காவுக்கான தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் பொதுவான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர், அமெரிக்காவின் தடைகளைத் தாண்டி மாஸ்கோவுடன் உறவு வைத்துக் கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியிருந்தார்.