ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெளசா மாவட்டத்தில் லால்சோட் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. மருத்துவரான இவர் தமது கணவர் உடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அர்ச்சனா பிரசவம் பார்த்த பொழுது கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மருத்துவர் அர்ச்சனா மீது குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் லால்சோட் காவல்நிலையத்தில் மருத்துவர் அர்ச்சனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான மருத்துவர் அர்ச்சனா, தான் தவறு செய்யவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து மருத்துவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக தலைவர் ஜிதேந்தர் கோத்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.