தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
அப்போது தமிழகத்தின் நிதி நிலவரம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20 ஆயிரத்து 860 கோடியே 40 லட்சத்தை உடனடியாக விடுவிக்குமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வரும் நிலையில், இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமனிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 14-வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானித்தை விடுவிக்கவும் முதல்வர் வலியுறுத்தினார்.அதன்படி, அடிப்படை மானிய நிலுவைத் தொகை ரூ.548 கோடியே 76 லட்சத்தையும், செயல்பாட்டு மானியம் ரூ.2 ஆயிரத்து 29 கோடியே 22 லட்சத்தையும் தமிழகத்திற்கு விரைந்து வழங்குமாறும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM