புதுடில்லி:’லோக்பால்’ எனப்படும், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை கண்காணிக்கும் அமைப்பின் உத்தரவுப்படி, முதல் முறையாக, அரசு ஊழியர் ஒருவர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து உள்ளது.
தேசிய கலாசார சொத்துக்கள் பாதுகாப்பு ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் மானேகர் சிங்.இவர், உத்தர பிரதேசத்தின் லக்னோ, கர்நாடகாவின் மைசூரு ஆகிய இடங்களில், தேசிய கலாசார சொத்துக்கள் பாதுகாப்பு ஆய்வகத்தின் கட்டடங்களை கட்டும் ஒப்பந்தத்தை, வி.கே.சிங் கன்ஸ்ட்ரக் ஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் வழங்கினார்.
இதில், பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, லோக்பால் அமைப்பு இந்த ஊழல் குறித்து கண்காணித்து, வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அரசு ஊழியர் மீதான ஊழல் வழக்கில், லோக்பால் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரிக்கும் முதல் வழக்கு இது.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் மானேகர் சிங் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், வழக்குக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement