வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வேகமாக அதிகரித்து வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் தற்போயை நிலவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
அதனடிப்படையில் கடலட்டை குஞ்சுகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, நீடித்து நிலைத்த கடலட்டை வளர்ப்பிற்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை உடனடியாக விஸ்தரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களம், நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும் கடலட்டைப் பண்ணை செய்கையாளர்களும் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலில், கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.