பீஜிங் : சீனாவில் பயணியர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 49 ஆயிரம் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நம் அண்டை நாடான சீனாவில் கடந்த 21ம் தேதி ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான உள்நாட்டு பயணியர் விமானம் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானம் சுக்குநுாறாக நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த 132 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் விமானத்தின் உடைந்த பாகங்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு கறுப்பு பெட்டிகளும் பீஜிங்கில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சீன விமான போக்குவரத்து ஆணையத்தின் விமான பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் ஜூ டாவோ நேற்று கூறியதாவது:
பல நாட்களாக நடந்து வரும் மீட்புப் பணியில் இன்ஜின் உள்ளிட்ட விமானத்தின் முக்கிய பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2.63 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் இருந்த மண் தோண்டி எடுக்கப்பட்டு அதில் இருந்து விமானத்தின் 49 ஆயிரத்து 117 உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement