லாஸ் ஏஞ்சல்ஸ்: மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராகவே இருந்ததாக ஆஸ்கர் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நடந்த ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, “ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?” என்று நகைச்சுவை தொனியில் கேட்டார். இதனால் கோபம் அடைந்த வில் ஸ்மித் மேடையில் விர்ரென நடந்து சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வில் ஸ்மித்தின் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தன. தனது செயலுக்காக வருந்தி வில் ஸ்மித் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில், கிறிஸ் ராக்கை மேடையில் வில் ஸ்மித் அறைந்தவுடன், அவரைக் கைது செய்வதற்கு போலீஸார் தயாராக இருந்ததாக ஆஸ்கர் விழா தயாரிப்பாளர் வில் பேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்கர் தயாரிப்பாளர்களில் ஒருவரான வில் பேக்கர் கூறும்போது, “வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராகவே இருந்தனர். கிறிஸ் ராக்கிடம் நீங்கள் புகார் அளித்தால் நாங்கள் அவரை கைது செய்வோம். முடிவு உங்களிடம் உள்ளது என்றனர். ஆனால், கிறிஸ் ராக் புகார் அளிக்கவில்லை. தான் நன்றாக இருப்பதாகவே அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்” என்றார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் மீது கிறிஸ் ராக் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.