ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் மூலவர் சன்னதி அருகில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 4 மணியளவில் பஞ்சாங்க சிரவணம், இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
முன்னதாக காலை 8.30 மணியளவில் பக்த கண்ணப்பருக்கு சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் கவிஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.