“என் நாடு என்னைப் போலவே மிகச் சிறியது
எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது
வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள் பறப்பதில்லை
எங்கள் வானம் கனவு கண்டுகொண்டிருக்கிறது, அந்த நாட்களைக் கேட்டு
எங்களது குழந்தைப் பருவத்தை திருப்பித் தாருங்கள்” என்ற பாடலை சவுதியின் வாய்ஸ் நிகழ்ச்சியில் பாடிய க்யூனா என்ற சிரிய சிறுமியை சர்வதேச அரசியலைக் கவனிக்கும் யாரும் மறந்திருக்க முடியாது. பானா அல்பெட், அய்லான், ஓம்ரான் இந்தப் பெயர்களும் அப்படித்தான்.இவர்கள் அனைவரும் சிரிய போரின் தாக்கத்தை நம் கண்ணால் முன்னால் நிறுத்தியவர்கள்.
சிரிய போர் ஏற்பட்டு சுமார் 11 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்னமும் முழுமையாக போரிலிருந்து மீளாத சிரியா கடந்து வந்த பாதையைதான் இந்தத் தொகுப்பில் காண இருக்கிறோம்.
சிரிய போர் எப்படி ஏற்பட்டது? – மத்திய தரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ள நாடு சிரியா. தனது சொந்த நாட்டு மக்களை குண்டுகளாலும், வான்வழித் தாக்குதலும் கொன்று குவித்தது. ஆட்சி அதிகாரத்துக்காக நான்கு பக்கங்களிலும் சிரியா சூறையாடப்பட்டது. சுமார் 30 வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அஸாத். எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது என்று வெளிப்படையாகவே 1990-ல் அறிவித்தார்.
அவ்வப்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் மக்களின் ஆதரவு பெற்றவராகத்தான் ஹஃபெஸ் விளங்கினார். சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னரே, வேலையின்மை, ஊழல், அரசியல் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சூழலில்தான் ஹஃபெஸ்க்குப் பிறகு அவரது மகனான பஷார் அல் ஆசாத் சிரியாவில் அதிபராக பதவியேற்றார்.
பஷார், சிரியாவின் அதிபராக பதவியேற்றது முதலே கிளர்ச்சியாளர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக போரை அறிவித்தனர். பஷாருக்கு எதிராக ஐஎஸ் இயக்கமும், குர்திஷ் இனத்தவரும் போரை அறிவித்தனர். பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் சிரியாவில் ஷியா முஸ்லிமான பஷார் அல் ஆசாத் ஆட்சி செய்வதை எதிர்த் தரப்பு விரும்பவில்லை என்பதும் சிரிய உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணமாகியது.
உயிரிழப்பு: சிரிய போரில் மார்ச் 2011 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2011 ஆம் ஆண்டு வரை 3,50,209 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆனால், இது உண்மையான எண்ணிக்கை இல்லை என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு இதுவரை சிரிய போரில் 4,94,438 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
போரில் ஈடுபட்ட நாடுகள்: சிரிய போரில் அதிபர் பஷார் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் உதவின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் சில அரபு நாடுகள் இருந்தன. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஆரம்பக்கட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவின.
11 வருட போர்: 11 வருட போரில் சிரிய மக்கள் எண்ண முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். 6 லட்சம் மக்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக வேறு இடங்களுக்கு சென்றனர். சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு உட்பட மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்படாமல் போனது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டன.
இட்லிப், அலெப்போ நகரங்கள் போரில் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரிய நகரங்களை அரசு காட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் பல நகரங்கள் உள்ளன.
11 ஆண்டுகளாக நடக்கும் சிரிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் சிரிய போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தற்போது வரை தோல்வியே அடைந்துள்ளன. இந்த நிலையில் சிரிய அதிபர் பஷார் பதவி விலகல் ஒன்றையே கிளர்ச்சியாளர்கள் சிரிய போரை முடிவுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர். கிளர்ச்சியாளர்களின் இந்தக் கோரிக்கையை பஷார் ஏற்கத் தயாராக இல்லை.
சிரிய போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி உள்ளிட்ட நாடுகள் எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.