புதுடில்லி:“இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும்,” என, வைரஸ் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் வலியுறுத்தி உள்ளார்.
நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இரண்டு, ‘டோஸ்’களாக, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், என்.ஐ.வி., எனப்படும், வைரஸ்கள் ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் நேற்று கூறியதாவது:
நம் நாட்டில், கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனால், பல மாநிலங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இவற்றை முழுமையாக நிறுத்த, இது சரியான நேரமாக எனக்கு தெரியவில்லை. நாம் பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
ஆனால், குழந்தைகள் சரியாக முக கவசம் அணியாத நிலையில், அவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.குறிப்பாக, புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement