புதுடெல்லி: மார்ச் முதல் ஜூலை மாதம் வரை மாநிலங்களவையில் 72 எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதன்படி ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரபுல் படேல், சுப்பிரமணியன் சுவாமி, சஞ்சய் ராவத், மேரி கோம், ரூபா கங்குலி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் பதவிக் காலம் முடிகிறது.
பதவிக் காலம் நிறைவடையும் எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு தலைமையில் டெல்லியில் நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
விழாவில் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “அதிக எண் ணிக்கையிலான எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அவர்களின் பங்களிப்புகளை மாநிலங்களவை எப்போதும் நினைவுகூரும்” என்றார்.
பிரதமர் மோடி பேசும்போது, ‘‘பதவி காலம் நிறைவடையும் எம்.பி.க்கள், இந்த அவையில் பெற்ற அனுபவத்தை வருங்கால சந்ததியினருக்கு, நாட்டுக்கு வழி காட்டுவதில் முக்கிய பங்களிக்க வேண்டும். இப்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். நமது தலைவர்கள் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். நாமும் நமது கடமையை நிறை வேற்ற வேண்டும்’’ என்றார்.