இத்தொடரில், பெரும்பாலும் டாஸும் பனிப்பொழிவுமே கைகோர்த்து போட்டியின் முடிவை இறுதி செய்கின்றன என்பதாலும், எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அவற்றின் தாகம் தீருவதில்லை என்பதாலும் ‘பௌலிங்கே பலம்’ என்னும் வியூகத்தோடு ஆறாவது, ஏழாவது பௌலிங் ஆப்சன்களோடு போட்டியை அணிகள் அணுகத் தொடங்கிவிட்டன.
ரபாடா என்ட்ரி பஞ்சாப்புக்கு பலம் சேர்த்திருக்க, கடந்த போட்டியில் ஷெல்டன் ஜாக்சன் நிகழ்த்திய விக்கெட் கீப்பிங் வித்தைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து இன்னொரு பௌலிங் ஆப்சனாக ஷிவம் மவியைச் சேர்த்து சாம் பில்லிங்ஸிற்கு க்ளவுஸினை மாட்டி விட்டிருந்தது கேகேஆர்.
பவுன்ஸாகும் பிட்ச்தான் என்றாலும் ஃப்ளாட் டிராக்காக வான்கடே பேட்ஸ்மேனுக்கும் நேசக்கரம் நீட்டும். தவான் – அகர்வால் கூட்டணி, கடந்த சிஎஸ்கே போட்டியில் நடந்ததுபோல் ரன்களை பவர்பிளேவுக்கு உள்ளாகவே வாரிக் குவிக்கும் என்பது முன்னதாக அனுமானிக்கப்பட்டது. உத்தேசங்கள் உடைக்கப்பட்டன முதல் ஓவரிலேயே! அட்டகாசமான நியூபால் பௌலராக இந்த சீசனில் விக்கெட் கல்லா கட்டும் உமேஷோடு ஸ்ரேயாஸ் தொடங்க அவுட்ஸ்விங்கரோடு உமேஷ் தொடங்கினார்.
பெரும்பாலான பந்துகளை பேக் ஆஃப் லெந்த்தில் வீசியவர், கடைசிப் பந்தை ஃபுல் லெந்த்தில் அவுட் ஸ்விங்கராக அனுப்ப, அதை அகர்வால் கணிப்பதற்குள் பந்து அவரது பேடை நலம் விசாரித்து எல்பிடபிள்யூவாக்கியது. முதல் ஓவர் விக்கெட்டுக்கும் உமேஷுக்குமான பிரிக்க முடியாத பந்தம் இத்தொடரில் அப்படியே நீடிக்கிறது. ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் இது அவரது 50-வது விக்கெட், இதுவரை மூன்று பௌலர்கள் மட்டுமே இச்சாதனை சாலையில் பயணித்திருக்கின்றனர்.
அந்த விக்கெட்டுக்குப்பின் 100 ரன்களுக்குள் பஞ்சராகாமல் பஞ்சாபின் வண்டியை ஓட்டிச் செல்ல வைப்பதாக அமைந்தது அடுத்ததாக வந்த பனுகா ராஜபக்ஷவின் ஆட்டம். 9 பந்துகள் ஆயுட்காலம்தான் அவரது இன்னிங்க்ஸ் நீடித்தது என்றாலும் ஓவருக்கொரு பவுண்டரி அடித்து அழுத்தத்தை ஏற்றினார். இலங்கை வீரர்களில் யாரோ ஒருவர் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கமாக மாறியுள்ளது. கடந்த போட்டி, ஷிவம் துபேயின் பந்துகள் சேதாரமடைவதைப் பார்த்ததென்றால் இப்போட்டியில் ஷிவம் மவியினை ஹாட்ரிக் சிக்ஸரோடு திக்குமுக்காடச் செய்தார் ராஜபக்ஷ. கவுன்டர் அட்டாக்காக லெந்த்தை மாற்றி அதிவேகமாக ஒரு ஷார்ட் பாலை மவி அனுப்ப அது மிட் ஆஃபில் நின்ற சவுத்தியிடம் கேட்சாகி 344.44 ஸ்ட்ரைக்ரேட்டோடு மிரட்டியவரை வெளியேற்றியது.
பவர்ப்ளேயின் கடைசி ஓவரும் கேகேஆரை ஏமாற்றாமல் சவுத்தி வீசிய ஆஃப் கட்டர் தவானையும் ஆஃப் செய்து வெளியேற்றியது. அப்போது ரன்ரேட் 10.33 என்றாலும், மூன்று விக்கெட்டுகள் என்பதும், பஞ்சாப்பின் மிடில் ஆர்டர் பலவீனமும், அங்கிருந்து போட்டி நகர உள்ள திசையை வெளிச்சமாக்கின. நங்கூரமிட்டு போட்டியைக் கட்டுக்குள் வைக்க வேறெந்த பேட்ஸ்மேனும் முயலவேயில்லை. அல்லது முயன்றவர்களை ஸ்ரேயாஸும் அவரது பௌலர்களும் விடவேயில்லை. எழ எழ அடிப்பது சிலரது பாணி என்றால் எழவே விடாமல் அடித்தது ஸ்ரேயாஸின் பாணியாக இருந்தது.
மூன்று விக்கெட்டுகள் விழுந்த மொமெண்டத்தை அப்படியே தக்க வைக்க உமேஷை அவர் கொண்டுவர ஃபுல் லெந்த்தில் வந்த பந்தை சிக்ஸராக்க முயன்று கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டன் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே இரக்கமேயில்லாமல் நரைனின் ஆஃப் பிரேக் கொஞ்சமாக செட்டில் ஆகத் தொடங்கியிருந்த ராஜ் பாவாவையும் காலி செய்தது. 85 ரன்கள் என்றாலும் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அங்கேயே வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கியது கேகேஆர்.
அந்தப் புள்ளியிலிருந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை ஏதோ மாயவிசைக்குக் கட்டுப்பட்டதைப் போல கேகேஆர் பௌலர்கள் வீழ்த்திக் காட்டினர். ஜக்லிங் செய்வது போல ஸ்பின்னர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களையும் மாற்றி மாற்றி விக்கெட்டுகளை அள்ளினார் ஸ்ரேயாஸ். கடந்த போட்டியிலேயே இந்திய கேப்டன்ஷிப் ரேஸில் தானுமிருப்பதைப் பதிவு செய்த ஸ்ரேயாஸ் இப்போட்டியில் அதனைத் தனது சமயோசித பௌலிங் மாற்றம் மற்றும் ஃபீல்ட் செட்அப் மூலமாகவும் உறுதி செய்துள்ளார். ஷாருக்கானை சவுத்தி அனுப்பியதும், உமேஷை இறுதி ஓவருக்காக ஹோல்டில் போடாமல் 15-வது ஓவரை அவர் வீசவைக்க, ஹர்ப்ரீட் மற்றும் ராகுல் சஹார் என இரண்டு விக்கெட்டுகள் அவர்கள் வசம் சேர்ந்தன.
இறுதியாக ரபாடா மட்டுமே அட்டாக் செய்து 25 ரன்களைச் சேர்த்து கொஞ்சமாக ஆட்டம் காட்டினார். அவருக்கு ஸ்லோ பால் ஒன்றால் ரசல் திட்டம் தீட்ட, அதை ரபாடா உயரத்தில் தூக்கியடித்தார். அதை பவுண்டரி லைனின் பக்கத்தில் இருந்த சவுத்தி பல அடிகள் ஓடிவந்து, தரையில் பந்தை நோக்கி சறுக்கிச் சென்று நம்ப முடியாத கேட்சைப் பிடித்தார். கில் தொடரின் ஆரம்பத்தில் பிடித்த அற்புதமான கேட்சுக்கே டஃப் பைட் கொடுத்தது இந்தக் கேட்ச். இறுதியாக அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப்பும் ரன்அவுட் ஆக, மீதமிருந்த பத்து பந்தைக்கூட அடிக்க ஆளின்றி 137-க்கு ஆல்அவுட் ஆனது பஞ்சாப். ஃபீல்டர்களின் பேருதவியால் அட்டகாசமான ஒரு பௌலிங் ஷோவை நடத்திக் காட்டியிருந்தது கேகேஆர்.
ரபாடாவின் நான்கு/ஐந்து விக்கெட் ஹாலோ, ராகுல் சஹாரின் சுழல் சாமர்த்தியமோ ஏதோ ஓர் அதிசயம் நடந்தால் மட்டுமே, பஞ்சாப்பால் பள்ளத்திலிருந்து மீண்டெழ முடியும் என்னும் நிலையில்தான் இரண்டாம் பாதி தொடங்கியது.
ரபாடா கைவிடவில்லை. தனது ‘பஞ்சாப் நாள்களில்’ வீசிய முதல் ஓவரிலேயே ரஹானேவை வெளியேற்றி அந்த கிக் ஸ்டார்ட்டைக் கொடுத்தார். முதல் போட்டியில் அடித்த 44 ரன்கள் மட்டுமே இன்னமும் ரஹானேயின் அடையாளமாக இருக்கிறது. மற்ற இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில்தான் அவர் வெளியேறியுள்ளார். விமானம் டேக் ஆஃப் ஆகும்போது நேரும் ஆரம்பகட்ட ஜெர்க்தான் இது, அடுத்த பார்ட்னர்ஷிப்கள் ரன்களை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட, பஞ்சாப் விக்கெட்டுகளை வாரிக் குவித்துக் கொண்டது.
ஸ்ரேயாஸுக்கும் வெங்கடேஷுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் வெகுநேரம் நீடிக்கவில்லை. பஞ்சாப்புக்குத் தேவையான திருப்புமுனையை ஓடியன் ஸ்மித் கொண்டு வந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்தை வெங்கடேஷ் தூக்கியடிக்க, அது பவுண்டரி லைனுக்கு சற்று முன்னதாகவே தரையில் இறங்கி ஹர்ப்ரீத்தால் பிடிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் 29 ரன்கள் என அவரது மோசமான ஃபார்ம் தொடர்கிறது. பவர்ப்ளேவுக்குள் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அப்பொழுதும்கூட தேவைப்படும் ரன்ரேட் 6.21 என்பது கேகேஆர் டேஞ்சர் ஜோனின் விளிம்பில்கூட கால் வைக்கவில்லை என்பதையே உணர்த்தியது.
ஆனாலும், துளிர்விட்ட பஞ்சாப்பின் நம்பிக்கையைச் சற்றே உயிர்க்க வைத்தது ராகுல் சஹாரின் ஒரு ஓவர். மும்பைக்குக் கடந்த சீசன்களில் மிடில் ஓவர்களில் கேம் சேஞ்சராகக் கைகொடுத்தவர் ராகுல் சஹார். ஸ்பின்னுக்குக் கைகொடுக்காத மைதானங்களிலும் பெரிதாகச் சாதிக்கக் கூடியவர். இந்த சீசனிலும் அவரது வெற்றிநடை தொடர்கிறது. தனது ஸ்பெல்லின் முதல் ஓவரையே இரண்டு விக்கெட்டுகளோடு மெய்டனாக மாற்றியிருந்தார் ராகுல் சஹார். ஸ்ரேயாஸ் தனது விக்கெட்டை வேண்டி விரும்பி தியாகம் செய்திருந்தார். லெக் ஸ்பின்னர் அவரது விக்கெட்டை எடுப்பது இத்தொடரில் இது இரண்டாவது முறை. கேகேஆருக்கு அதிர்ச்சியளிக்க, ராணாவின் விக்கெட்டும் அதே ஓவரில் வந்து சேர்ந்திருந்தது.
நான்கு விக்கெட்டுகளை இழந்ததால், அழுத்தம் மொத்தமாக கேகேஆரின் பக்கம் ஏற, அதை அடக்க ‘ரசல் ஷோ’ ஆரம்பமானது. மும்பைக்கு பொல்லார்ட், சிஎஸ்கேவிற்கு பிராவோ என்றால் கேகேஆரிற்கு ரசல்தான். ஆல்ரவுண்டராக போட்டி முழுமையிலும் தனது சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பவர் ரசல். சமீப காலமாக அவரது ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ‘பழைய ரசல் இவரில்லை’ என விமர்சனம் எழுந்தது. அதுவும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவரது காஸ்ட்லி ஓவர்கள் வெற்றி வாய்ப்பினை மொத்தமாக ஆர்சிபி பக்கம் மாற்றி எழுதியது. அது எல்லாவற்றையும் மாற்றுவது போல இப்போட்டியில் இரண்டு விஷயங்கள் அமைந்தன. அவரின் இரண்டு விக்கெட்டுகளும், 31 பந்துகளில் அவர் எடுத்த 70 ரன்களும் ஆட்டத்தை முற்றிலுமாக கொல்கத்தா பக்கம் திருப்பின.
பில்லிங்ஸ் – ரசல் கூட்டணி, செட்டில் ஆக ஓரிரு ஓவர்கள் எடுத்துக் கொண்டாலும் அதன்பிறகு அம்பயருக்கு வேலை வைப்பது போல் ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் தங்களது பெயர்களை எழுத வைத்தனர். குறிப்பாக ரசல், ‘வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரைக் கேட்டாலே அடிப்பேன்’ என்ற மோடில் இருந்தார். ஓடியன் ஸ்மித்தின் எக்கானமி பொதுவாகவே 10-ஐ சுற்றித்தான் பயணிக்கும். அதனை இன்று 20-க்கு எகிற வைத்து ஒட்டுமொத்த பௌலிங் படைக்கும் மூடுவிழா நடத்திவிட்டார் ரசல். ஓடியன் வீசிய 12-வது ஓவரிலேயே போட்டி முடிந்துவிட்டது. அதில் ரசல் அடித்த இரண்டு சிக்ஸர்களும் சரவெடிதான்.
‘குறைவான இலக்குதான், மெதுவாக ஆடுவோம்’ என்றில்லாமல், கடந்த போட்டியில் வாங்கிய அடியின் வலியின் வெளிப்பாடாக, இலக்கை வெகுவிரைவில் எட்டி விடவேண்டுமென்ற வெறி அவரிடம் இருந்தது. உடனிருந்த பில்லிங்க்ஸ் சப்போர்டிங் ரோல் செய்ததே போதுமானதாக இருக்க, 15-வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார் ரசல்.
லோ ஸ்கோரிங் போட்டியாக இருந்தாலும், ஒரு பக்கமாக நகராமல் சுவாரஸ்யமானதாக மாறப் போகிறதென்ற எதிர்பார்ப்பை அடுத்தடுத்து விழுந்த நான்கு விக்கெட்டுகள் ஏற்படுத்த, அதனை ஏழே ஓவரில் சுக்குநூறாக்கிவிட்டார் ரசல். அதில் ஏமாற்றம்தான் என்றாலும், வெகு நாள்களுக்குப் பின் காணக்கிடைத்த ரசலின் விஸ்வரூபம் ரசிகர்களை பிரமிப்பின் உச்சத்தை எட்டவைத்தது.
ஆரஞ்ச் மற்றும் பர்ப்பிள் கேப்களை கிரீடமாகச் சூடி, டேபிள் டாப்பராக (தற்காலிகமாக) சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது, கேகேஆர். மறுபுறம், பஞ்சாப் தனது பேட்டிங் படையின் தரம் மற்றும் நீளத்தை பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டிய தருணமாக இந்த முடிவு மாறியுள்ளது.