புதுடெல்லி: தேர்வுகளை திருவிழா போல கொண்டாட வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.
தேர்வு மீதான அச்சம், பதற்றத்தை மிகைப்படுத்திக் கொள்ளக் கூடாது. கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் ஆண்டுதோறும் தேர்வுக்கு முன்பாக அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். ‘பரிக் ஷா சே சர்ச்சா’ என்ற இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ‘பரிக் ஷாசே சர்ச்சா’ நிகழ்ச்சி, டெல்லி டால்கட்டோரா மைதானத்தில் நேற்று நடந்தது. அரங்கில் கூடியிருந்த மாணவர்கள் மட்டுமின்றி, காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர்.
அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: மாணவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சிலநேரங்களில் சிரமங்களை சந்திக்கின்றனர். வகுப்பில் கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் சேர்ந்து நினைவுக்கு கொண்டுவரும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். இது அறிவை ஒன்றாக உள்வாங்கிக் கொள்ள உதவும்.
பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் சொந்தக் கனவுகளையும், நிறைவேறாத ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. பெற்றோர் சில நேரங்களில் தங்கள் குழந்தைகளின் பலம் மற்றும் விருப்பங்களை உன்னிப்பாக கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
நீங்கள் கண்டுபிடிக்கத் தவறிய அசாதாரணமான ஏதேனும் ஒருஆற்றலை ஒவ்வொரு குழந்தையும் பெற்றிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களின் எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். திறன்கள்தான் உலகம் முழுவதும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொழில்நுட்பம் ஒரு சாபக்கேடுஅல்ல. அதை நாம் திறம்பட பயன்படுத்த வேண்டும். ஆன்லைனில் படிக்கும்போது மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உண்மையில் நாம் படிக்கிறோமா அல்லதுசமூக ஊடகங்களில் பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிடுகிறோமா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன பாடம் நடத்துகிறார்களோ அதையேதான் ஆன்லைனிலும் நடத்துகின்றனர். எனவே, ஊடகத்தை பிரச்சினைக்குரியதாக கருதக்கூடாது. நீங்கள் எதைச் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்துகொண்டே இருங்கள்.
நீங்கள் அனைவரும் திருவிழா மனநிலையில் தேர்வை எழுத முடியும் என நம்புகிறேன். தேர்வு மீதான அச்சம், பதற்றத்தை மிகைப்படுத்திக் கொள்ளக் கூடாது. கடின உழைப்பின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும். முதல்முறையாக தேர்வு எழுதும் எவரும் இந்த அரங்கில் அமர்ந்திருக்கவில்லை. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திரும்பத் திரும்ப தேர்வு எழுதுவதன் மூலம் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். தேர்வுகள்தான் நம் வாழ்க்கையில் படிக்கட்டுகள். ஏப்ரல் என்பது திருவிழாக்கள் நிறைந்த மாதம். இந்த திருவிழாக்களை கொண்டாடும் வேளையில் தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தேர்வுகளை திருவிழாபோல கொண்டாட வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கைக்கான கலந்தாய்வு முழுமையானது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் கல்வி முறையும் கருத்துகளும் 21-ம் நூற்றாண்டில் நமது வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்க முடியாது. காலத்துக்கேற்ப நாம் மாற வேண்டும்.
உத்வேகம் பெறுவதற்கு எனசூத்திரம் எதுவும் இல்லை. அதற்குபதிலாக உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என கண்டறிந்து அதில் உழைப்பை செலுத்துங்கள். நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்யுங்கள். அப்போதுதான் அதிகபட்ச பலனை பெற முடியும்.
நீங்கள் ஒரு தனித்துவமான தலைமுறையை சேர்ந்தவர்கள். உங்களுக்கு அதிக போட்டி உள்ளது. அதேவேளையில் அதிகவாய்ப்புகளும் உள்ளன. வாழ்க்கையின் பல்வேறு கட்டத்திலும் நமது பெண்கள் சிறந்து விளங்குவதை பார்ப்பதைவிட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும், மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை பாராட்டுவதுடன் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நான் உங்களுடன் இணைந்திருக்கும்போது, உங்கள் விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பார்வையை பெறுகிறேன். அதற்கேற்ப என் வாழ்க்கையை வடிவமைக்க முயற்சிக்கிறேன். எனவே, இந்த நிகழ்ச்சி எனக்கு உதவியாக உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
கலந்துரையாடலுக்கு முன்னதாக அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பொருட்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.