சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள், படுக்கை வசதிகளில், பெண் ஒருவர் ஒரு இருக்கையை முன்பதிவு செய்தால், அருகில் உள்ள இருக்கை அல்லதுபடுக்கை பெண்களுக்கே ஒதுக்கப்படுகிறது. அதேபோல், சில பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கை, படுக்கைகள் பெண்களுக்கு முன்பதிவின் போதே ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், அரசு விரைவு பேருந்துகளில் இதுபோன்ற பெண்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்கும் வகையில், வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு தனியாகபடுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர், அனைத்து கிளைமேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் படுக்கைவசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சீட் எண் 1 மற்றும் 4 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது இந்த இருக்கைகளை தேர்வு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரும் காலங்களில் மேற்கண்ட படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பேருந்து புறப்படும் வரை மேற்கண்ட படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதை பொது படுக்கையாகக் கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பரிசோதனை ஆய்வாளர்கள் ஆகியோரிடம் இதுகுறித்து அறிவுறுத்துவதுடன், அறிவிப்பு பலகை மூலமும் பயணிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.