சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அழகிய சுவர் ஓவியம் வரைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியினர், ஓவியத்தை அழித்து விட்டு திருமாவளவன் பெயரை வரைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை 2.0 திட்டம் மூலமாக சென்னை மாநகரம் முழுவதும் சுவர்களை அழகுபடுத்தும் விதமாக கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஓவியர்கள் இணைந்து தன்னார்வமாக சுவர் ஓவியம் வரைந்து வருகிறார்கள்…
இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில், துணை பொறியாளர்களின் எற்பாட்டின் பேரில் அப்பகுதியில் உள்ள சுற்று சுவர்களை அழகுபடுத்தும் விதமாக தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அங்கு எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழித்து விட்டு
ஓவியம் வரையத் தொடங்கினர்..
அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியைச் சார்ந்தவர்கள்
எங்கள் தலைவர் பெயர் எழுதி உள்ள சுவற்றில் நீங்கள் எப்படி ஓவியம் வரையலாம்.? என்றும் தலைவர் பெயரை எப்படி அழித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்பியதோடு பெண்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது
மேலும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள சுவற்றில் ஓவியர்கள் வரைந்த ஓவியத்தினை அழித்து விட்டு அதில் மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பெயரை எழுதி உள்ளனர்
இதை தட்டி கேட்ட ஓவியம் வரையும் தன்னார்வலர்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓவியர்கள், தங்களின் சொந்த பணத்தில் வண்ணங்கள் வாங்கி ஒரு சேவையாக ஓவியம் வரைந்து தமிழக அரசு அறிவித்த சென்னை 2.0 திட்டம் மூலமாக ஓவியங்களை வரைந்து வருவதாக கூறினர்.
விடுதலை சிறுத்தை கட்சி மட்டுமின்றி, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழித்து விட்டு புதிய ஓவியங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று வரைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்களிடம் சண்டையிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களை தலைவர் பெயரை மட்டும் ஏன் அழிக்கிறீர்கள், அதன் அருகில் இருக்கும் திமுகவினர் பெயர்களையும் அழிக்க வேண்டும் என்று கூறி பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தையில் பேசியதாக, ஓவியர்களான தன்னார்வலர்கள் குற்றம்சாட்டினர்.
பதிலுக்கு திமுக சுவர் விளம்பரத்தையும் அழிக்க அனுமதி பெற்றுவிட்டோம் என்றும், அதிலும் தாங்கள் சென்னை 2.0 திட்டத்தின் ஓவியங்களை வரைய உள்ளோம் என்று எடுத்து கூறியும் கேட்காமல், தங்களை மிரட்டும் தொனியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், தாங்கள் வரைந்த ஓவியத்தின் மீது வண்ணம் பூசி அழித்து விட்டு அதில் திருமாவளவன் என்று பேர் எழுதியுள்ளதாகவும், ஓவியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
சென்னையில் தாங்கள் பல்வேறு பகுதிகளில் ஓவியங்களை வரைந்துள்ள போதும் இதுவரை எந்த கட்சி அரசியல் கட்சிகளும் தங்களை இதுபோன்று பேசியது இல்லை என்றும் இவர்களை போன்று பிரச்சனை செய்தது இல்லை என்றும் ஓவியர்கள் வேதனை வெளியிட்டனர்.
இனியாவது, விடுதலை சிறுத்தை கட்சியினர் எங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
மேலும், ஒரு மணி நேரம் இவர்கள் பொறுத்திருந்தால் நாங்கள் வரைந்து வீணாகி இருக்காது என்றும், தாங்கள் வரைந்த ஓவியத்தை அழித்தவர்கள் மீது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.