ஆணவத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆடுவதாக, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, தலைநகர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, கட்சியை தேசிய அளவில் விரிவுப்படுத்தும் நோக்கில், அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பதவி ஏற்றார்.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம்,
குஜராத்
உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் களமிறங்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போதே அதற்கான ஆயத்தப் பணிகளை அக்கட்சித் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்திற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இன்று வருகை புரிந்தனர்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் அருகே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். இதில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான்னும் கலந்து கொண்டார். பேரணிக்கு பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
நான் இங்கு எந்தக் கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. நான் இங்கு பாஜகவை தோற்கடிக்க வரவில்லை. நான் இங்கு காங்கிரசை வெல்ல வரவில்லை. நான் குஜராத் வெற்றி பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். குஜராத்தும் குஜராத் மக்களும் வெற்றி பெற வேண்டும். குஜராத்தில் இருக்கும் ஊழல் முறைகேடுகளை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆணவம் வந்து விட்டது. அவர்கள், மக்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வதில்லை. பஞ்சாப் வாக்காளர்களைப் போன்று இந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் வாய்ப்பு அளியுங்கள். நீங்கள் திருப்தி கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் எங்களை நீக்கி விடுங்கள். ஒரு முறை ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு அளித்தால் பின்னர் நீங்கள் மற்ற அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த செய்திசட்டவிரோத பங்களா: காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்!